கள்ள சாராய விற்பனை : ஆடு மேய்த்தவரை தாக்கிய காவல்துறை!!
மயிலாடுதுறை அருகே சாராயம் விற்பவர்களை பிடிக்க சென்ற காவலர் ஆடுமேய்க்க சென்ற இளைஞரை பிடித்து தாக்கியதால் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதி. கிராமமக்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு சாலைமறியல் போராட்டம்:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தாலுக்கா மணல்மேடு காவல் சரகத்திற்குட்பட்ட ராஜசூரியன் பேட்டையில் சாராயம் விற்பனை செய்வதாக மணல்மேடு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு 2 காவலர்கள் சென்றுள்ளனர்.
அப்போது சாரயம் விற்பனை செய்தவர்கள் தப்பி ஓடியுள்ளனர். அங்கு ஆடு மேய்த்து கொண்டிருந்த மேலத்தெருவை சேர்ந்த சுரேஷ் என்பவரை சந்;தேகத்தின் பேரில் பிடித்து மதன்குமார் என்ற காவலர் அடித்ததாக கூறப்படுகிறது.
அங்கிருந்த பெண் ஒருவர் தடுத்தும் காவலர் மதன்குமார் அடித்ததால் உள்காயமடைந்த சுரேஷ் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். சாரய விற்பனையில் ஈடுபட்டவரை விட்டுவிட்டு அப்பாவியை காவலர் தாக்கியதை கண்டித்து ராஜசூரியன் கிராமமக்கள் மணல்மேடு காவல்நிலையத்தை முற்றுகையிட்டு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுரேஷ்சை தாக்கிய காவலர் மீது நடவடிக்கை எடுக்ககோரி 2மணிநேரத்திற்கு மேலாக சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது.
சம்பவம் அறிந்து மணல்மேடு காவல்நிலையம் வந்த மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜ் கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டு கிராமமக்கள் கலைந்து சென்றனர்.
செய்திகள் : ச.ராஜேஷ், மயிலாடுதுறை