திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பின்புறம் சுமார் 2,668 அடி உயர மலை உள்ளது. இந்த மலையின் அடிவாரத்தில் பல்வேறு குடியிருப்பு பகுதிகள் உள்ளன. கடந்த 2 நாட்களாக திருவண்ணாமலையில் பெஞ்ஜல் புயல் காரணமாக கனமழை பெய்து வருகிறது.
தொடர் மழையினால் மலையில் இருந்து பாறை ஒன்று உருண்டு மலை அடிவாரத்தில் உள்ள வ. உ. சி. நகர் 11-வது தெருவில் உள்ள வீடுகளின் அருகில் விழுந்தது. அப்போது மண் சரிவு ஏற்பட்டதால் அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழை நீருடன் மண் சரிந்தது. இதில் ஒரு வீட்டின் மீது மண் சரிவு ஏற்பட்டு முழுவதுமாக மூடியது.
அந்த வீட்டில் கணவன், மனைவி, அவர்களின் குழந்தைகள் 2 பேர் மற்றும் கணவனின் அண்ணன் குழந்தைகள் 3 பேர் என்று மொத்தம் 7 பேர் இருந்ததாகவும், மண் சரிவினால் 7 பேரும் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் உள்ளே சிக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, மீட்பு பணிகள் தொடங்கியுள்ளன. தேசிய பேரிடர் மீட்பு படையினர் இரவே சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.