திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியக் குழுவின் கூட்டம் அதன் தலைவர் த. ராஜி தலைமையில் நடைபெற்றது.
துணைத் தலைவர் நாகம்மாள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மயில்வாகனன், ஷீலா அன்புமலர், பொறியாளர்கள் ராமு, வேளாங்கண்ணி, ரவி மலர்வண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாளர் தென்னரசு வரவேற்றார்.
ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பலர் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தில் கிராமப் பகுதியில் நிறைவேற்றக் கூடிய திட்டப் பணிகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து, ஒன்றிய செலவினங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் ஒன்றியக்குழுத் தலைவர் த. ராஜி பேசியதாவது: தற்போது பருவமழை பெய்து வரும் நிலையில் அந்தந்த கிராமப் பகுதியில் ஏற்பட்டுள்ள சாலை சேதங்கள், வீடுகளை இழந்தவர்கள் குறித்த தகவலை தெரிவியுங்கள்.
அதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்க உதவியாக இருக்கும். உறுப்பினர்கள் கொடுக்கும் தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் மூலம் மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.