திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பி, உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதிகப்படியாக வெளியேறும் உபரிநீர் குடியிருப்புகளைச் சூழ்ந்ததால், குடியிருப்பு வாசிகள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், துக்காப்பேட்டை பகுதியில் வருவாய்த்துறை அலுவலர் அலுவலகம் (குடியிருப்பு) எதிரில் மன்னர் காலத்தில் வெட்டப்பட்ட குளம் நீர்வரத்தின்றி நிரம்பாமல் உள்ளது. இதற்குக் காரணம், குளத்துக்கு வரும் அனைத்து கால்வாய்களும் அடைக்கப்பட்டு, குளத்தைச் சுற்றி நான்கு புறமும் தண்ணீர் செல்லமுடியாத அளவுக்கு ஆக்கிரமிப்புகள் நிறைந்துள்ளன.
ஆக்கிரமிப்பாளர்களின் கழிவுநீர் மட்டுமே குளத்தில் சென்று தேங்குகிறது.இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, குளக்கரையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி குளத்துக்கு தண்ணீர் செல்ல வழிவகை செய்யவேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனர்.