வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் ஸ்ரீதவளகிரீஸ்வரர் மலைக் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவின்போது, வந்தவாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் மலை மீது ஏறிச் சென்று இறைவனை வழிபடுவர்.
மேலும், அன்று மாலை 6 மணிக்கு திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படும். இந்த நிலையில், வருகிற 13-ஆம் தேதி வெண்குன்றம் ஸ்ரீதவளகிரீஸ்வரர் மலைக் கோயிலில் கார்த்திகை தீபத் திரவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி, வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு வட்டாட்சியர் ஆர். பொன்னுசாமி தலைமை வகித்தார். வந்தவாசி டிஎஸ்பி கங்காதரன், இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் சிலம்பரசன், கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் எஸ். தியாகராஜன், வெண்குன்றம் ஊராட்சி மன்றத் தலைவர் லட்சுமி வேலு, பாஜக மாவட்டச் செயலர் வி. குருலிங்கம் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஸ்ரீதவளகிரீஸ்வரர் மலைக் கோயிலில் பாலாலயம் செய்யப்பட்டு சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், கார்த்திகை தீபத் திருவிழா அன்று மலை ஏறும் வழியில் உள்ள பச்சையம்மன் கோயில் வரை மட்டும் பக்தர்களை அனுமதிப்பது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.