திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் காலை வேளைகளில் உற்சவர் விநாயகர், சந்திரசேகரர் சுவாமிகள் வீதியுலாவும், இரவு வேளைகளில் பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகளும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
திருவிழாவின் 4-ஆவது நாளான நேற்று காலை 9 மணியளவில் மூஷிக வாகனத்தில் விநாயகர், நாக வாகனத்தில் சந்திரசேகரர் வீதியுலா நடைபெற்றது.இரவு 10 மணியளவில் மூஷிக வாகனத்தில் விநாயகர், மயில் வாகனத்தில் வள்ளி, தெய்வானை சமேத முருகப் பெருமான், வெள்ளி காமதேனு வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், கற்பக விருட்ச வாகனத்தில் பராசக்தியம்மன், வெள்ளி வாகனத்தில் சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் வீதியுலா விமரிசையாக நடைபெற்றது.
கோயில் ராஜகோபுரம் எதிரில் இருந்து புறப்பட்ட பஞ்சமூர்த்திகள் வீதியுலா தேரடி தெரு, திருவூடல் தெரு, பே கோபுரத் தெரு, பெரிய தெரு என மாட வீதிகளில் வலம் வந்து மீண்டும் கோயில் எதிரே நிலையை அடைந்தனர்.இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் இரா. ஜீவானந்தம், அறங்காவலர்கள் உ. மீனாட்சி சுந்தரம், டி. வி. எஸ். ராசாராம், கு. கோமதி குணசேகரன், சினம் இராம. பெருமாள், கோயில் இணை ஆணையர் சி. ஜோதி, கோயில் உபயதாரர்கள் செய்திருந்தனர்.