திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா, பௌர்ணமியில் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இந்த நிலையில், திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப் பாதை தூய்மைப் பணியில் திருவண்ணாமலை மாநகராட்சி, மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைகளைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
இவர்களை சிறப்பிக்கும் வகையில் ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் சிறப்பு தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு தூய்மைப் பணியாளர்களை பாராட்டி பேசினார்.
தொடர்ந்து, தூய்மைப் பணியில் ஈடுபட்ட 4,000-க்கும் மேற்பட்டோர் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர், அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.இதில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.இராம்பிரதீபன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி, கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் இரா. ஜீவானந்தம், திருவண்ணாமலை மாநகராட்சி ஆணையர் காந்திராஜன், திருவண்ணாமலை ஊராட்சிகளின் உதவி இயக்குநர் சையத் அகமது பயாஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.