தென்காசி மாவட்டத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4 இடங்களில் தொடர் திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த 2 பேரை தனிப்படை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். தப்பியோடிய மேலும் இரண்டு பேரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் புளியங்குடி, சுரண்டை, பாவூர்சத்திரம் மற்றும் நடுவக்குறிச்சி ஆகிய பகுதிகளில் கடந்த சனிக்கிழமை ஒரே நாளில் அடுத்தடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் தொடர் கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
கடந்த சனிக்கிழமை மதிய நேரம் புளியங்குடி காவல் எல்லைக்குட்பட்ட நெல்கட்டும்செவல் பகுதியில் வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று திருடிச் சென்றது.
அங்கிருந்து சுரண்டை பகுதிக்குச் சென்ற அந்த கும்பல், மேலும் ஒரு இருசக்கர வாகனத்தைக் திருடிக் கொண்டு, இரண்டு வாகனங்களில் தப்பியோடியது.
தொடர்ந்து, பாவூர்சத்திரம் சாலையில் சென்றபோது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை வழிமறித்து, தாக்கி அவரிடமிருந்த வாகனம் மற்றும் செல்போனைப் பறித்துக் கொண்டு அந்த கும்பல் பறந்தது. ஒரு இருசக்கர வாகனத்தை மறைத்து வைத்து விட்டு, மற்ற இரண்டு இருசக்கர வாகனத்தில் 4பேரும் சென்றனர்.
அத்தோடு நிற்காமல், சேர்ந்தமரம் மற்றும் வீரசிகாமணி வழியாக நடுவக்குறிச்சி பகுதிக்குச் சென்ற இந்த கும்பல், அங்கே தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணை வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி, அவர் அணிந்திருந்த 6 கிராம் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பியோடியது.
ஒரே நாளில் அடுத்தடுத்து அரங்கேறிய இந்த துணிகரச் சம்பவங்கள் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அசோக் குமார் உத்தரவின்படி, குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
சம்பவம் நடந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்த தனிப்படை காவல்துறையினர், இந்தத் தொடர் கொள்ளையில் ஈடுபட்டது 4 பேர் கொண்ட கும்பல் என்பதை உறுதி செய்தனர்.
அதன் அடிப்படையில், தீவிரத் தேடுதல் வேட்டை நடத்திய தனிப்படையினர், கூடலூர் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் (28) மற்றும் மதன்குமார் (19) ஆகிய இருவரை அதிரடியாகக் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 3 இருசக்கர வாகனங்கள் மற்றும் 6 கிராம் தங்கச் சங்கிலி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள கூடலூர் பகுதியைச் சேர்ந்த மதியழகன் (25) மற்றும் செல்வகுமார் (20) ஆகிய இருவரை காவல்துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர்.
ஒரே நாளில் 4 இடங்களில் அரங்கேறிய இந்தத் தொடர் கொள்ளைச் சம்பவம் தென்காசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.