நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் எ.வ. வேலுவிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 100க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டு இரண்டு மணி நேரமாக தீவிர விசாரணை
அறப்போர் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஒதுக்கீட்டில் ரூபாய் 3.23 கோடி முறைகள் நடைபெற்றதாக முன்னாள் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு, அரசு அதிகாரிகள் ஒன்பது பேர் மற்றும் தனியார் ஒப்பந்ததாரர் ஒருவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்கள் உள்ளிட்ட 20 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி கணக்கில் வராத 40 லட்ச ரூபாய் பணம் முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
இதையடுத்து இந்த வழக்கின் விசாரணைக்காக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுக்கு லஞ்ச ஒழிப்பு துறை கடந்த 3ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பியது.ஆனால் இதய சிகிச்சை தொடர்பாக தான் சிங்கப்பூரில் ஒரு மருத்துவமனையில் அனுமதி ஆகியுள்ளதாகவும் தற்போது என்னால் ஆஜராக முடியாது சிகிச்சை முடிந்து லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறோம் என அவர் வழக்கறிஞர் மூலம் கடிதம் ஒன்று வழங்கி கால அவகாசம் கோரப்பட்டது.
இந்தநிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூரில் இருந்து முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சென்னை திரும்பினார் அப்போது லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவேன் என்று தெரிவித்தார் அதன் அடிப்படையில் இன்று ஆஜராக அவருக்கு சம்மன் வழங்கப்பட்டிருந்தது,
அதன் அடிப்படையில் இன்று காலை 11.30 மணி அளவில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினார் அவரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் டெண்டர் ஒதுக்கியது தொடர்பாகவும் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாகவும் துருவித் துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பாஸ்கர் தலைமையில் நடைபெற்று வரும் இந்த விசாரணையில் சுமார் 2 மணி நேரமாக அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் 100க்கும் மேற்பட்ட கேள்விகளை எழுப்பி விசாரணை நடத்தி வருவதாகவும் அதை எழுத்துப்பூர்வமாக பெற்றும் அவரது வாக்குமூலங்களை வீடியோ ஆதாரங்களாக பதிவு செய்தும் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
மேலும் நெடுஞ்சாலைத் துறையில் விடப்பட்ட ஒப்பந்தங்கள் தமிழ்நாடு அரசு விதிமுறைகள் பின்பற்றி கொடுக்கப்பட்டதா, ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முதல் தகவல் அறிக்கையில் சாலை போடாமலே அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாக குற்றம்சாடி இருந்தநிலையில் இந்த விடப்பட்ட டென்டர்களை நேரடியாக சென்று ஆய்வு செய்யப்பட்டதா என்ற பல்வேறு கேள்விகளை எழுப்பி முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவிடம் துருவி துருவி லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் 3.23 கோடி ரூபாய் பணம் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் நிலையில் அது எதன் அடிப்படையில் ஒதுக்கப்பட்டது என்ற பல்வேறு கோணங்களிலும் லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும் நெடுஞ்சாலை துறை ஒப்பந்தங்களில் போலி ஆவணங்கள் கொடுக்கப்பட்ட போது அதனை ஏன் முறையாக ஆய்வு செய்யவில்லை எனவும், மாநிலம் முழுவதும் நெடுஞ்சாலை பணிக்காக ஒதுக்கப்பட்ட நிலையில் ஏதாவது முறைகள் நடத்தப்பட்டுள்ளது என்ற கோணத்திலும் தீவிர விசாரணையில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறனர்.
மேலும் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பாஸ்கர் தலைமையில் நடைபெறும் இந்த விசாரணை இன்னும் மூன்று மணி நேரம் வரை நீடிக்கும் எனவும் கூறப்படுகிறது இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு வந்துள்ளார். மேலும் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுக்கு மதிய உணவும் லஞ்ச ஒழிப்பு அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
