க்ரைம்
Trending

பழனி அறநிலையத்துறை அதிகாரிகள் 5-க்கும் மேற்பட்டோரிடம் சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் சஜிதா IPS இன்று தீவிர விசாரணை

பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான ரூபாய் 100 கோடி மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்த விவகாரம் தொடர்பாக, திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் பழனி அறநிலையத்துறை அதிகாரிகள் 5-க்கும் மேற்பட்டோரிடம் சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் சஜிதா IPS இன்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

​திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் சந்நிதி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான ரூபாய் 100 கோடி மதிப்புள்ள நிலம், நீதிமன்ற உத்தரவுகளை மீறிப் போலி ஆவணங்கள் மூலம் வெறும் ரூபாய் 2 கோடிக்கு மோசடிப் பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பைக் கிளப்பியது.

​இதுகுறித்து பழனி கோயில் நிலங்கள் பிரிவு கண்காணிப்பாளர் ச. முருகானந்தம் அளித்த புகாரின் பேரில், பழனி அடிவாரம் போலீசார் புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், போலி டிரஸ்ட் பிரமுகர் முருகதாஸ் உள்ளிட்ட 4 பேர் மீது கூட்டுச்சதி, மோசடி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

​இவ்வழக்கின் தீவிரத்தன்மை, பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து சம்பந்தப்பட்டிருப்பது மற்றும் அரசு அதிகாரி ஒருவரே இந்த மோசடிக்குத் துணை நின்றது குறித்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) மற்றும் தென்மண்டல ஐஜி (South Zone IG) ஆகியோர் விரிவான ஆய்வு மேற்கொண்டனர்.

​இந்த நில மோசடியில் பல முக்கியப் பிரமுகர்களுக்கும், உயர்மட்ட அரசியல் நிர்பந்தங்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்பதால், வழக்கினை சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரி அரசுக்குப் பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டது.

அதனை ஏற்றுக்கொண்ட தமிழக காவல்துறை தலைமையகம், இந்த வழக்கினை உடனடியாகச் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.

​இதனைத் தொடர்ந்து, பழனி அடிவாரம் போலீசாரிடம் இருந்து வழக்கு ஆவணங்கள் அனைத்தும் இணையதளம் மூலம் சிபிசிஐடி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

சிபிசிஐடி டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையில் நேற்று திண்டுக்கல், தேனி, திருச்சி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 5 சிபிசிஐடி இன்ஸ்பெக்டர்களின் மேற்பார்வையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் திண்டுக்கல் அலுவலகத்தில் முதற்கட்ட தகவல் அறிக்கை (FIR) தயார் செய்து, பழனியில் சம்பந்தப்பட்ட இடத்தில் கள ஆய்வு நடத்தினர்.

இதன் தொடர்ச்சியாக, இன்று திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்ட பழனி அறநிலையத்துறை சார்பில் வழக்கு தாக்கல் செய்த முருகானந்தம், வருவாய்த்துறை தாசில்தார் மற்றும் விஏஓ மற்றும் பத்திர பதிவுத்துறை அதிகாரி என 5-க்கும் மேற்பட்ட அதிகாரிகளிடம், மதுரையில் இருந்து வருகை தந்த சிபிசிஐடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஜிதா நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.

​இந்த விசாரணையின் மூலம் மோசடியில் தொடர்புடைய மேலும் பல முக்கியப் புள்ளிகள் குறித்த விபரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button