திருச்செந்தூர் முருகன் கோவிலில், தண்ணீர் கேன் வியாபாரி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கோவில்பட்டியைச் சேர்ந்த சுரேஷ், தண்ணீர் கேன் விற்பனை செய்து வந்தார். இந்நிலையில், சண்முகவிலாச மண்டபம் முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி, அவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். உடலில் பலத்த தீக்காயமடைந்த அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர், கோவில் ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சுரேஷை மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து கோவில் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் வந்த போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் போது கோவிலில் சுமார் 300 சிறு வியாபாரிகள் வியாபாரம் செய்து வரும் நிலையில், சுரேஷை சிலர் தாக்கியதால் மனவேதனையில் இந்த முடிவை எடுத்ததாக, முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


