செய்திகள்

கடலூரில் மழையால் 5 லட்சம் நெல் மூட்டைகள் சேதம் – விவசாயிகள் குற்றச்சாட்டு

கடலூர் மாவட்டம் முழுவதும் 120-க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன.

இதையடுத்து, கிடங்குகளில் ஏற்பட்டுள்ள இடப்பற்றாக்குறை காரணமாக, கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல் மூட்டைகள் உரிய நேரத்தில் அப்புறப்படுத்தப்படாமல் தேக்கமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.


இந்நிலையில், கடந்த இரு நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் பெய்த திடீர் மழையால், கொள்முதல் நிலையங்களில் குவித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 5 லட்சம் நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.


மேலும், சில கொள்முதல் நிலையங்களில் ஒரு மாதத்திற்கும் மேலாக நெல்லுடன் திறந்தவெளியில் காத்திருந்தும் கொள்முதல் செய்யப்படாததால், மழையில் நனைந்த நெல் முளைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.


இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி, கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக அப்புறப்படுத்துவதுடன், மழையில் நனைந்த நெல்லையும் உரிய விலைக்கு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதற்கிடையே, ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால், சமீபத்தில் நெல் நாற்று விடப்பட்ட சுமார் 200 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் அப்பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button