
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. இதில் கலெக்டர் லீலா அலெக்ஸ் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார்.
அப்போது, வேலூர் மாவட்டம் கே.ஜி. ஏரியூர் பகுதியைச் சேர்ந்த காந்தி அளித்த மனு அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்தது. அதில், உயிருடன் இருக்கும் எனக்கு இறப்பு சான்றிதழ் வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
நான் விவசாயக் கூலி வேலை செய்து வருகிறேன். கடந்த 2025 பிப்ரவரி மாதம் என் தந்தை ஆனந்தன் உயிரிழந்தார். அவரது பெயரை ரேஷன் அட்டையில் இருந்து நீக்கியபோது, தவறுதலாக எனது பெயரும் நீக்கப்பட்டுவிட்டது.
இதனால் கடந்த 18 மாதங்களாக எனக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்கவில்லை. எனது பெயரை மீண்டும் ரேஷன் அட்டையில் சேர்க்கக் கோரி கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
தற்போது எனது மகன்கள் பூவரசன், பேரரசன் ஆகிய இருவரும் இந்திய ராணுவத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களது ஆவணங்களை சமர்ப்பிக்கும்போது, ரேஷன் அட்டையில் தந்தையின் பெயர் இல்லாததால் வேலைவாய்ப்பு பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே, ரேஷன் அட்டையில் எனது பெயரை உடனடியாக சேர்க்க வேண்டும். இல்லையெனில், உயிருடன் இருக்கும் எனக்கு இறப்பு சான்றிதழையாவது வழங்குங்கள் என காந்தி தெரிவித்துள்ளார்.


