
ஒட்டப்பட்டி கிராமத்தில் உள்ள மளிகை கடையில் 24 மணி நேரமும் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதால் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தன் அரசு உயர்நிலைப்பள்ளி எதிரே மளிகைக் கடை நடத்தி வருகிறார். இந்த மளிகைக் கடையில் அனைத்துப் பிரபல பிராண்ட் மதுபாட்டில்களும் 24 மணி நேரமும் குளிரூட்டப்பட்டு கள்ளத்தனமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும், அரசு நிர்ணயித்த விலையை விட ஒரு மதுபாட்டில் மீது ரூ. 30 முதல் ரூ. 50 வரை கூடுதல் கட்டணம் வசூலித்து இந்தச் சட்டவிரோத விற்பனை செய்து வருகிறார்கள். இதனை தொடர்ந்து, 24 மணி நேரமும் மது கிடைப்பதால் நள்ளிரவு முதல் அதிகாலை வரை அடையாளம் தெரியாத பல நபர்கள் கிராமத்திற்குள் வந்து செல்கின்றனர். இதனால் இரவில் பெண்கள், குழந்தைகள் வெளியில் நடமாட முடியாத சூழல் நிலவுவதுடன், கிராம மக்களிடையே பெரும் அச்சமும் பாதுகாப்பற்ற தன்மையும் உருவாகியுள்ளது. இதையடுத்து, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து நடைபெறும் இந்தச் சட்டவிரோத மது விற்பனை குறித்து மத்தூர் காவல் நிலையத்தில் கிராம மக்கள் பலமுறை புகார் தெரிவித்துள்ளனர். இருப்பினும், காவல்துறையினர் லஞ்சம் பெற்றுக்கொண்டு கள்ள மது விற்பனைக்கு அனுமதி அளித்து வருவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, கிராமத்தில் ஏதேனும் பெரிய அசம்பாவிதங்கள் ஏற்படும் முன், இந்தச் சட்டவிரோத மது விற்பனையைத் தடுத்து நிறுத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கும் காவல்துறைக்கும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.