
சங்கரன்கோவிலில் முறையான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்காத 19 சாயப்பட்டறைகளுக்கு சீல் வைக்கப்பட்டதை அடுத்து, நெசவாளர்களின் வாழ்வாதாரத்தைக் காக்கக் கோரி பல்வேறு போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் சாயப்பட்டறை உரிமையாளர்கள் சார்பாக அனைத்துக் கட்சியினரும் கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசைக் கண்டித்து கண்டனக் கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும், விசைத்தறித் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தமிழக அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க உரிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, கடந்த மாதம் சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறி இயங்கி வந்த சாயப்பட்டறைகளை அமைச்சர் ராஜீவ் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வில் சாயப்பட்டறைகளில் முறையான கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்படாமல், நிலத்தடி நீரும் சுற்றுப்புறச் சூழலும் கடுமையாகப் பாதிக்கப்படும் வகையில் செயல்பட்டு வந்த 22 சாயப்பட்டறைகளுக்கு சீல் வைக்க அவர் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இதன் தொடர்ச்சியாக, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், காவல்துறையினரின் பாதுகாப்புடன் அப்பகுதியில் இருந்த 19 சாயப்பட்டறைகளுக்குப் பூட்டி சீல் வைத்தனர். அதிகாரிகளின் இந்த நடவடிக்கையால், அப்பகுதியைச் சேர்ந்த விசைத்தறி நெசவாளர்கள் மற்றும் சாயப்பட்டறை உரிமையாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சாயப்பட்டறைகளில் முறையான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு தமிழக அரசு உரிய கால அவகாசம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு கட்டப் போராட்டங்களை முன்னெடுத்தனர். இருப்பினும், சங்கரன்கோவிலில் புகழ்பெற்ற ‘ஆடித்தவசு திருவிழா’ நடைபெற்றதை முன்னிட்டு, பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் நலன் கருதி நெசவாளர்கள் தங்களின் போராட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.



