
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் அரசு உதவிபெறும் உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அங்குள்ள பள்ளி விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். அந்த விடுதியில் வார்டனாக ஷாம் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அப்பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவனை வார்டன் ஷாம் நேற்று தேர்வில் ஏன் குறைந்த மதிப்பெண் எடுத்தாய் என கேள்வி கேட்டு, அங்கிருந்த இரும்பு கம்பில் மாணவனின் தொடைப்பகுதியில் அடித்துள்ளார். இதில் காயமடைந்த மாணவன் தனது மாமாவிற்கு தகவல் அளித்துள்ளார். அந்த தகவலின் பேரில் நேற்று விடுதியிலிருந்து மாணவனை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்ற போது, அங்கிருந்த சமூக ஆர்வலர்கள் சைல்டு லைன் அமைப்புக்கு தகவல் அளித்துள்ளனர். தொடர்ந்து, சைல்டு லைன் அமைப்பினர் ஆன்லைன் மூலம் தேன்கனிக்கோட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் பள்ளி விடுதிக்கு சென்று மாணவனிடம் விசாரணை செய்த பின்னர், வார்டன் ஷாம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


