
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவனின் பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் வாசன் கண் மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச கண் சிகிச்சை மற்றும் கண் அறுவை சிகிச்சை ஆலோசனை முகாமை நடத்தியுள்ளன. இந்த மருத்துவ முகாமில் தூய்மைப் பணியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். முகாமிற்கு வாசன் கண் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் கனிமொழி தலைமை தாங்கினார். இதை தொடர்ந்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் விமல் வங்காளியார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். இந்த முகாமில் பொதுமக்களுக்கு இலவசமாக கண் பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் மூலம் தேவையானவர்களுக்கு இலவச கண் கண்ணாடிகளும் வழங்கப்பட்டன. இதனை தொடர்ந்து, தொல் திருமாவளவனின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்த இலவச கண் சிகிச்சை முகாம் பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மருத்துவப் பரிசோதனை செய்து பயன்பெற்றனர். இந்த முகாமை ஏற்பாடு செய்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மற்றும் வாசன் கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.


