
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தியாகச் செம்மலும், கப்பலோட்டிய தமிழன் என்று போற்றப்படுபவருமான வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக, வ.உ.சியின் திருவுருவப் படத்திற்கு அப்பகுதி பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் மாலை அணிவித்து, மலர் தூவி தங்களது மரியாதையைச் செலுத்தினர். இதை தொடர்ந்து வ.உ.சி திருவுருவப் படத்திற்கு சிறப்புத் தீபாராதனை காட்டப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. நிகழ்வின் போது, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி புகழ் ஓங்குக என்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன. வ.உ.சி.யின் சுதந்திரப் போராட்டத் தியாகங்கள் மற்றும் சுதேசி இயக்கத்திற்காக அவர் பட்ட இன்னல்களையும் நினைவு கூரும் வகையில் பெரியவர்கள் குழந்தைகளுக்கு விளக்கிக் கூறினர். பின்னர், இந்த விழாவில் சமூக ஆர்வலர்கள், பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு தேசப் பற்றை வெளிப்படுத்தினர்.
