
தென்காசி மாவட்டம் கடையம் அருகே பொட்டல்புதூர் பகுதியை சேர்ந்தவர் சந்தான பாலமுருகன். கூலி தொழிலாளியான இவர் நேற்றிரவு பொட்டல் புதூர் தீபத் திடல் பகுதி வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்பொழுது, இருசக்கர வாகனத்தில் வந்த வந்த மர்மநபர்கள் தலையைத் துண்டித்து கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பி ஓடினர். மேலும், இந்த தகவலறிந்து வந்த ஆழ்வார்குறிச்சி போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் பொட்டல்புதூரைச் சேர்ந்த கார்த்திக் ராஜா, ஆலங்குளம் மருதப்புரத்தைச் சேர்ந்த முத்தரசன் ஆகிய இருவரை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர், அவர்களிடம் விசாரணை நடத்தியதில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முயல் வேட்டையின் போது இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு மற்றும் கடந்த வாரம் நடைபெற்ற மோதல் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது. மேலும், இந்த கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
