
மத்தியப் பிரதேசத்தில் சாகர் மாவட்டத்தில் உள்ள பராஜ் கிராமம் சுற்றுவட்டார பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்து 25க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். இதையடுத்து, உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் மாஜிஸ்திரேட் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, கிராமங்களில் மருத்துவக் குழுவினர் முகாமிட்டு பரிசோதனை நடத்தி வருவதால் கடந்த 24 முதல் 48 மணி நேரத்திற்குள் மது அருந்தியவர்கள், அறிகுறிகள் இல்லாவிட்டாலும் மருத்துவர்களை அணுகி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் பிரதிபா அறிவுறுத்தினார். மேலும், இச்சம்பவம் குறித்து தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.