செய்திகள்

நடிகர் சிவாஜியின் மூத்த மகள் சாந்தி காலமானார்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் – கமலா கணேசன் தம்பதியின் மூத்த மகளும், திரைப்படத் தயாரிப்பாளருமான சாந்தி இன்று அதிகாலை காலமானார்.

சிவாஜி கணேசன் – கமலா தம்பதியினருக்கு ராம்குமார், பிரபு ஆகிய இரு மகன்களும், சாந்தி, தேன்மொழி ஆகிய இரு மகள்களும் உள்ளனர். அதில் மூத்த மகள்தான் சாந்தி.

இவரது பெயரில் தான் சென்னையின் புகழ்பெற்ற சாந்தி தியேட்டர் மவுண்ட் ரோட்டில் 1961ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 1961 ஜனவரி 12ஆம் தேதி அப்போதைய முதல்வர் காமராஜரால் திரையரங்கம் திறந்து வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து தஞ்சாவூரிலும் சாந்தி மற்றும் கமலா ஆகியோரின் பெயர்களில் இரு திரையரங்குகள் அமைக்கப்பட்டன.

இதையடுத்து,1968 நவம்பர் 3 ஆம் தேதி சாந்திக்கும் நாராயணசாமிக்கும் திருமணம் நடைபெற்றது. பின்னர் திரைப்படத் தயாரிப்பிலும் ஈடுபட்ட சாந்தி, சிவாஜி கணேசன் நடித்த தங்கப்பதக்கம் திரைப்படத்தின் தயாரிப்பில் முக்கியப் பங்காற்றியதாக குறிப்பிடப்படுகிறது.

சிவாஜி கணேசன் மற்றும் கமலா கணேசன் மறைவுக்குப் பின்னர் குடும்பச் சொத்துப் பங்கீடு தொடர்பான விவகாரத்திலும் சாந்தி மற்றும் அவரது சகோதரி தேன்மொழி சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியிருந்தனர்.

சாந்தி நாராயணசாமியின் உடல் அஞ்சலிக்காக வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் மற்றும் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button