
சேலம் மாவட்டம் மெய்யனூர் வி.எம்.ஆர். நகரில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அப்பகுதியில் முறையான கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால், கழிவுநீர் தேங்கி நிற்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சில நேரங்களில் தேங்கும் கழிவுநீர் அருகிலுள்ள மருத்துவமனை மற்றும் வீடுகளுக்குள் புகுந்து விடுவதாகவும், இதனால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறி, நேற்று காலை அப்பகுதி மக்கள் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த தகவலறிந்து வந்த போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
மேலும், தற்போது டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் தேங்கியுள்ள கழிவுநீரால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து, கழிவுநீர் கால்வாய் அமைக்க நிதி இல்லை என நிர்வாகம் கூறுவதாகவும், தாங்களே பணம் வழங்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.


