செய்திகள்

பால்கனி இடிந்து விழுந்து வடமாநில இளைஞர் பலி

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பப்பு என்ற இளைஞர், கடந்த 5 ஆண்டுகளாக சென்னை பழைய வண்ணாரப்பேட்டை வரதராஜ பெருமாள் கோயில் தெருவில் வசித்து வருகிறார்.

அப்பகுதியில் உள்ள ஸ்டீல் பட்டறை ஒன்றில் பணியாற்றி வந்த அவர், வழக்கம்போல் நேற்று மாலை வீட்டின் வாசல் பகுதியில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது, ஏற்கனவே பழுதடைந்த நிலையில் இருந்த அந்த வீட்டின் பால்கனி திடீரென இடிந்து பப்புவின் மீது விழுந்தது. இந்த விபத்தில், இடிபாடுகளுக்குள் சிக்கிய அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், இடிபாடுகளை அகற்றி இளைஞரின் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதனிடையே, உயிரிழந்த பப்புவின் உடல் சுமார் இரண்டு மணி நேரமாக மீட்கப்படாமல் இருந்ததாகக் கூறி, அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும், பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள பழைய மற்றும் பழுதடைந்த கட்டிடங்களை மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய கட்டிடங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

மேலும், இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button