
தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவு திட்டம், தற்போது 6 முதல் 8ம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க விழா இன்று சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக, கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. மாணவர்களின் காலை உணவுத் தேவையை பூர்த்தி செய்வதுடன், பள்ளி வருகையை ஊக்குவிக்கும் நோக்கத்திலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களையும் திட்டத்தின் கீழ் கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்தது. இதையடுத்து, திட்டத்தின் பெயர் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் என மாற்றப்பட்டு, திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கான தொடக்க விழா இன்று சென்னை திருவான்மியூரில் உள்ள நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டு, விரிவாக்கம் செய்யப்பட்ட காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதை தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் உணவு பரிமாறினார். பின்னர் மாணவர்களுடன் தரையில் அமர்ந்து உணவருந்திய அவர், அவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் வகைகள் குறித்தும் மாணவர்களிடம் கேட்டறிந்தார்.

இந்தத் திட்ட விரிவாக்கத்தின் மூலம், தமிழகம் முழுவதும் உள்ள 15,454 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் சுமார் 15.30 லட்சம் மாணவ, மாணவிகள் கூடுதலாக பயன்பெற உள்ளனர்.
இதற்காக நடப்பு நிதியாண்டில் கூடுதலாக ரூ.217 கோடியே 63 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம், காலை உணவு திட்டத்திற்கான மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.724 கோடியாக உயர்ந்துள்ளது.
6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் வகையில் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மேலும் பல மாணவர்களுக்கு இதன் மூலம் பயன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



