புதுக்கோட்டை நகராட்சி சாலைகளில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த 114 மாடுகளை பறிமுதல் செய்த நகராட்சி, சாலையில் திரிந்த மாடு முட்டி ஒருவர் உயிரிழந்ததையடுத்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை.
புதுக்கோட்டை நகராட்சியில் 42 வார்டுகள் உள்ளது அந்த பகுதிகளில் அதிக அளவில் நாய்களும் மாடுகளும் சாலைகளில் சுற்றித் திரிவதால் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்பட்டு அவ்வப்போது விபத்துகள் நடந்து வருகின்றது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுக்கோட்டை கணேஷ் நகர் பகுதியில் வெறிபிடித்த நாய் சாலையில் திரிந்த மாட்டை கடித்து மாட்டிற்கு வெறிபிடித்து சாலையில் சென்றவர்களை முட்டியதில் சேகர் என்பவர் உயிரிழந்தார்,
இந்நிலையில் உயிரிழந்தவரை மாடு முட்டும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகி வெளிவந்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி சாலைகளில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்க நகராட்சிக்கு உத்தரவிட்டிருந்தார் அவர் உத்தரவின் படி இன்று புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் பொது மக்களுக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித் திரிந்த 114 மாடுகளை பறிமுதல் செய்து புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் அடைக்கப்பட்டுள்ளது, இதனையடுத்து அந்த பகுதிக்கு வந்த நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாட்சா ஒவ்வொரு மாட்டிற்கும் உரிமையாளர்களிடம் 5000 ரூபாயும் கன்றுக்குட்டிக்கு 3,000 ரூபாயும் அபராதம் வசூல் செய்யப்படும் என்றும் மேலும் இதனையும் மீறி சாலைகளில் மீண்டும் மாடுகளை திரியவிட்டால் மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.