தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியில் கப்பல் கட்டும் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 25 பேர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு பகுதியில் சிறிய அளவு உப்பு உற்பத்தி கடந்த 93 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது. மேலும், இத்தொழிலை நம்பி சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் இருந்து வருகின்றனர். இந்நிலையில் கப்பல் கட்டும் தளத்திற்காக நிலம் கையகப்படுத்துவதாக அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்புக்கு எதிராக உப்பு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள் ஆகியோர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை தனித்தனியாக அழைத்து சார் ஆட்சியர் பிரபு பேச்சு வார்த்தை நடத்தினார். அதில் அவர்களுக்கு உடன்பாடு ஏற்படாத நிலையில், முள்ளக்காடு பேருந்து நிறுத்தம் அருகே ஆகஸ்ட் 1ம் தேதி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில், உப்பு உற்பத்தியாளர்கள் தொழிலாளர்கள் மீனவர்கள், வியாபாரிகள் உள்ளிட்டோர் கூட்டமாக கலந்து கொண்டனர். இந்நிலையில் போராட்டம் நடத்த அனுமதி கேட்டு காவல்துறை அனுமதி வழங்காத நிலையில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக முத்தையாபுரம் காவல் நிலையத்தில் 25 பேர் மீதுபோலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
