திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி பேட்டை சாலையில் உள்ள தனியார் அறுவை மில் அருகே செயல்பட்டு வந்த மர குடோனில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
முருகன் (56) என்பவருக்குச் சொந்தமான இந்த மர குடோனில் அதிகாலை சுமார் 3 மணியளவில் தீப்பிடித்து, கணநேரத்தில் தேக்கு மரங்கள் மற்றும் குடோன் முழுவதும் பரவியது.
தகவலறிந்து திண்டுக்கல் தீயணைப்பு நிலைய அலுவலர் பொன்னம்பலம் தலைமையில் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தேக்கு உட்பட விலை மதிப்புள்ள மரங்கள், அறுவை இயந்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின.
தீ விபத்துக்கான காரணம் குறித்து திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த மர அறுவை மில்லிற்கு முறையான அனுமதி உள்ளதா என்றும் அவர்கள் கூறுகின்ற ரூபாய் மதிப்பிற்கு உண்டான மரங்கள் எங்கிருந்து வெட்டி கொண்டுவரப்பட்டன என்றும் சம்மந்தப்பட்ட அரசு துறைகளின் கண்காணிப்பின் கீழ் இந்த மர அறுவை மில் இருந்ததா என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது