
சென்னை காவிரி விவகாரம் தமிழகம், கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திற்கு தண்ணீர் இல்லை என கர்நாடகா முதலமைச்சர் டி.கே சிவகுமார் திட்டவட்டமாக கூறியுள்ளார். தமிழக முதலமைச்சர் விஜய் கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார். இதற்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதை தவெகவின் மெத்தனபோக்கை கண்டித்து திமுக போராட்டத்தில் ஈடுபடவுள்ளது. இந்நிலையில் விஜயை ஆதரித்து மாணிக்கம் தாகூர் கருத்து கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் நமக்கு தண்ணீர் வர வேண்டும் என்பதற்காக தான் போராடி வருகிறோம். யாரும் தண்ணீர் வரக்கூடாது என்று நினைக்கவில்லை. இதில் தமிழக முதல்வரின் அணுகுமுறை வேறு மாதிரி இருக்கிறது. தமிழகத்திற்கு தண்ணீர் வேற வேண்டும் என்கிற பார்வையில் அவர் சில முடிவுகளை எடுக்கிறார். அதில் நாங்கள் அவருக்கு உறுதுணையாக உள்ளோம்.
கர்நாடகா சென்றாலே உரிமை போய்விடுமா
எங்களின் பார்வையும் அதுதான். தமிழக முதலமைச்சர், எங்கள் மூத்த தலைவர் சிதம்பரம் உள்ளிட்டோர் சொல்வது போல, காவிரியில் தமிழகத்தின் உரிமையை விட்டு கொடுக்க முடியாது. தமிழகத்தின் உரிமையை வாங்க வேண்டும். அதற்காக அடுத்த வாரம் 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சரை சந்தித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம். ராகுல் காந்தி சென்னையில் கட்சி பயிற்சி முகாமுக்கு வருகிறார். மாவட்ட தலைவர்களுடன் 6 மணி நேரம் நடத்துகிறார். இது முழுக்க முழுக்க கட்சி நிகழ்ச்சி.
அவர் முதலமைச்சர் விஜயை சந்திக்க திட்டமில்லை. எம்ஜிஆரே காவிரி விவகாரத்தில் கர்நாடகா சென்றுள்ளார். ஆணையம் அமைக்கப்பட்ட பிறகும் ஜெயலலிதா நேரில் சென்று பார்த்துள்ளார். பார்ப்பதால் மட்டுமே நம் உரிமைகளை விட்டு கொடுத்ததாகிவிடாது. முதலமைச்சர் ஒரு முயற்சியை மேற்கொள்கிறார். நாம் இந்தியா பாகிஸ்தான் இல்லை. கர்நாடகா அரசிடம் அவர் நேரடியாக கேட்டு பார்க்கவுள்ளார். எல்லாரும் சொல்வதைத்தான் முதலமைச்சர் செய்ய வேண்டும் என நினைப்பதே தவறு. அவர் நல் எண்ண அடிப்படையில் செல்கிறார்.
ராகுல் காந்தி என்ன பிரதமரா
சட்டரீதியாக நம்மிடம் நியாயம் உள்ளது. இதில் நீதி கிடைக்கும் என்கிற நம்பிக்கை உள்ளது. முதலமைச்சர் புதிய நிறுவனங்களுடன் 12,500 கோடி முதலீட்டில் கையெழுத்திட்டுள்ளார். டிக்டாக் வீடியோவுக்கும், இன்ஸ்டா பேச்சுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. தெலுங்கு தேச எம்பி சொல்வது போல ஆந்திராவில் ஒன்றும் நடக்கவில்லை. அங்கு பெரியளவுக்கு முதலீடு செல்லவில்லை. தமிழக அரசு சிறப்பான வகையில் முதலீட்டை ஈர்க்கிறது. தொழில் வளர்ச்சி சிறப்பாக உள்ளது. இதில் குறை சொல்ல எதுவுமில்லை.
நானும், மோடிஜியும் நெருக்கம் என அன்புமணி சொல்லி வருகிறார். ஏதோ அவர் மட்டும் தமிழகத்திற்கு நல்லது செய்வதாக பிம்பம் உருவாக்கி வருகிறார். அவர் நினைத்தால் மோடிஜியிடம் நேரடியாக பேசி காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீரை கொண்டு வர சொல்லுங்கள். ராகுல் காந்தி இப்போது பிரதமராகவா உள்ளார். யார் பதவியில் இருக்கிறார்களோ அவர்களிடம் பேச தைரியம் வேண்டும்” என்றார்.