
சென்னை கொடுங்கையூர்- மணலி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் செவிலியரிடம், மருத்துவர் தவறாக நடந்து கொள்ள முயன்றதாக கொடுங்கையூர் மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட செவிலியர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், தான் டிப்ளமோ நர்சிங் படிப்பை முடித்துவிட்டு, தனியார் மருத்துவமனையில் கடந்த ஒரு மாதமாக செவிலியராக பணியாற்றி வருவதாகவும், தான் பணியில் இருந்தபோது மருத்துவர் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், மருத்துவரின் செயலால் அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டதால் தனது சத்தம் கேட்டு உடன் பணியாற்றியவர்கள் கதவைத் திறந்து உள்ளே வந்து தன்னை வெளியே அழைத்து வந்ததாகவும் தனது புகாரில் கூறியுள்ளார். இதையடுத்து தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்ற மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்தில் செவிலியர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் மருத்துவர் மீது தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
