
தூத்துக்குடி பத்திநாதபுரத்தைச் சேர்ந்தவர் சரஸ்வதி, இவருக்கு கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சரஸ்வதி பத்திநாதபுரத்தில் உள்ள தனது தந்தைக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதனால், இவருக்கும் அருகில் வசித்து வரும் அர்ஜுனன் குடும்பத்தினருக்கும் இடையே இடப்பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. இந்நிலையில் சரஸ்வதி கட்டி வரும் வீட்டின் கீழ் பக்கத்தில் வெளியே செல்வதற்கு ஒரு பாதை அமைத்துள்ளார். அதை அர்ஜுனன் குடும்பத்தினர் தகரத்தை வைத்து அடைத்துள்ள நிலையில் சரஸ்வதி அந்த தகர கதவை எடுத்து பாதையை ஏற்படுத்தியுள்ளார். இதனால் கோபமடைந்த அர்ஜுனன் குடும்பத்தினர்கள் உருட்டு கட்டைகளுடன் வந்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது 70 வயதான அர்ஜுனன் சரஸ்வதியை உருட்டு கட்டைகளுடன் கடுமையாக தாக்க சரஸ்வதி மயங்கி விழுந்து உள்ளார். அப்போது அருகில் இருந்தவர்கள் சரஸ்வதியை மீட்டு அவரை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அர்ஜுனன், சரஸ்வதியை முதலில் தாக்கியதால் தான் தற்காப்பிற்காக கம்பை வைத்து தாக்கியதாக கூறி அவரும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து, இருதரப்பினரும் மாறி மாறி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் சரஸ்வதி மீது 70 வயதான அர்ஜுனன் உருட்டு கட்டையால் தாக்கும் காட்சிகள் இருந்தும், காவல்துறையில் அர்ஜுனன் உறவினர் உதவி ஆய்வாளராக பணியாற்றுவதால் போலீசார் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக சரஸ்வதி குற்றம் சாட்டியுள்ளார்.
