
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். அவர் அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் வெட்டுக் காயங்களுடன் சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், கொலை சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் 3 சிறார்களை கைது செய்தனர். இதனை தொடர்ந்து, போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மாரியப்பனும் கைது செய்யப்பட்ட 3 சிறார்களும் சம்பவத்தன்று விவசாய நிலத்தில் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது, சிறார்கள் மாரியப்பனை தின்பண்டங்கள் வாங்கி வருமாறு அனுப்பியதாகவும், நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராததால் அவர்களுக்குள் ஆத்திரம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, மாரியப்பன் நீண்ட நேரத்திற்குப் பிறகு அங்கு திரும்பி வந்தபோது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றி அடிதடியாக மாறிய நிலையில், ஆத்திரமடைந்த சிறார்கள் அங்கிருந்த அரிவாளை எடுத்து மாரியப்பனை வெட்டிவிட்டு தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட 3 சிறார்களிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.