

மதுரை சூர்யா நகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கடந்த 28ஆம் தேதி நடைபெற்ற சிறுமியின் காதணி விழாவில், பிரமாண்டமான முறையில் தாய்மாமன் சீர் மற்றும் மொய் வழங்கப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
தென்மாவட்டங்களில் தாய்மாமன் சீர் வழங்கும் நடைமுறையில் சகோதரியின் குழந்தைகளின் காதணி விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் தாய்மாமன் சார்பில் சீர் வழங்குவது வழக்கமாக இருந்து வருகிறது.
சிறுமிக்கு மொய்யாக வழங்குவதற்காக ரூ.500 நோட்டுகள் கட்டுக்கட்டாக அடுக்கப்பட்டு, மொத்தம் ரூ.60 லட்சம் பணம் பெட்டி பெட்டியாக வைக்கப்பட்டிருந்தது. அந்தப் பணப்பெட்டிகளை தலையில் சுமந்தபடி உறவினர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று மொய் வழங்கியுள்ளனர்.
மேலும், 50 பவுன் தங்க நகைகள், வைர நெக்லஸ், வெள்ளிப் பொருட்கள், வெள்ளித் தட்டுகளில் பல்வேறு சீர்வரிசை பொருட்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
இதுமட்டுமின்றி, சொகுசு கார், லாரிகளில் 500 வகையான சீர்வரிசை பொருட்கள், 50 கரும்புக் கட்டுகள், 500 மூட்டை அரிசி உள்ளிட்ட ஏராளமான பொருட்களும் சீர் வரிசையாக கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரமாண்டமான தாய்மாமன் சீர் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. வீடியோவை பார்த்த பலரும், “தாய்மாமன் சீர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் போல” என வியப்புடன் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
