
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம், சர்க்கார் பெரியபாளையம் கிராமம் குளத்துப்பாளையத்தில் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பில் உடனடியாக ‘சமுதாய நலக்கூடம்’ அமைக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்க தலைவர் ஈ.பி.அ.சரவணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர், சென்னையில் சமூக நீதித்துறை அமைச்சர் மாண்புமிகு வன்னியரசு அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார்.
இப்பகுதியில் ஏழை எளிய ஆதிதிராவிடர் குடும்பங்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இவர்களின் நீண்ட காலத் தேவை தொடர்பாக எங்களுடைய நுகர்வோர் நல அமைப்பின் சார்பில் கடந்த 16-06-2025 முதல் தொடர்ந்து மனுக்கள் அளிக்கப்பட்டு, 13 மாத தொடர் போராட்டத்திற்குப் பிறகு தற்போது வருவாய்த்துறையினரின் சாதகமான அனுமதி பெறப்பட்டுள்ளது.
இப்பகுதியில் உள்ள புல எண். 20-ல் (உட்பிரிவு 20/1-ல் உள்ள 80 சென்ட் அரசு புறம்போக்கு நிலம்) இந்த நலக்கூடத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கலாம் என ஊத்துக்குளி வட்டாட்சியர் கடந்த 02.09.2025 மற்றும் 15.07.2026 ஆகிய தேதிகளில் மாவட்ட தனி வட்டாட்சியருக்கு (ஆதிதிராவிடர் நலம்) கடிதம் மூலம் பரிந்துரை செய்துள்ளார். நிதி ஒதுக்கீடு மற்றும் கட்டுமானப் பணிகள் தொடங்குவதில் தற்போது சுணக்கம் நிலவுகிறது.
எனவே, மாண்புமிகு அமைச்சர் அவர்கள் இப்பகுதி மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக நிதி ஒதுக்கீடு செய்து சமுதாய நலக்கூடம் அமைக்க உதவிட வேண்டும் என சங்கத்தின் தலைவர் ஈ.பி.அ.சரவணன் வலியுறுத்தியுள்ளார்.
