
சமூக ஊடகங்களில் பெண்களை குறித்து அவதூறாகவும், கொச்சையாகவும் பதிவிடும் விவகாரத்தில், தவெகவை சேர்ந்தவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, சட்டப்பேரவையில் தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா பேசும்போது, சமூக ஊடகங்களில் பெண்களை குறித்து மிகவும் கொச்சையாகவும் தவறாகவும் பதிவுகள் வெளியிடுவதில் தவெகவை சேர்ந்தவர்களும் இருப்பதாக குறிப்பிட்டார். இதனை முதல்வர் விஜய் கவனத்தில் கொண்டு, கட்சியினரை கண்டிக்க வேண்டும் என்றும் பிரேமலதா வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த தவெக அமைச்சர் நிர்மல்குமார், பெண்கள் குறித்து அவதூறாக பேசும் தவெகவை சேர்ந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், தவெக பெயரில் திமுகவினர் போலி சமூக ஊடக கணக்குகளை உருவாக்கி அவதூறு பரப்புவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இதையடுத்து, தன்னுடைய பெயரிலும், பிற தலைவர்களின் பெயரிலும் போலி கணக்குகளை உருவாக்கி அவதூறு பரப்பும் நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக அவர் கூறினார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலத்தில் எந்த வகையான சங்கடங்களை ஏற்படுத்தினார்களோ, அதேபோன்ற நடவடிக்கைகளை தங்களுக்கும் மேற்கொள்வதாக திமுகவினர் மீது அமைச்சர் குற்றம் சாட்டினார். இது போன்ற போலி கணக்குகள் மற்றும் அவதூறு பதிவுகளை கண்டறிந்து தடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், சமூக ஊடகங்கள் வாயிலாக தவறாக சித்தரிக்கும் பணியை பெரும்பாலும் திமுகவினரே மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார். அதே நேரத்தில், தவெகவை சேர்ந்தவர்கள் யாராவது பெண்கள் குறித்து அவதூறாகவோ, தரக்குறைவாகவோ பதிவிட்டால், அவர்கள் மீதும் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

