
குஜராத் மாநிலம் சர்கேஜ் பகுதியைச் சேர்ந்தவர் சோபியா. இவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் வரவேற்பாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சோபியா மூன்று மாதங்களுக்கு முன்பு தனது ஆண் நண்பருடன் இருக்கும் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இது குறித்து, சோபியாவிடம் அவரது தந்தை மற்றும் சகோதரர் ஆண் நண்பருடன் பேசக்கூடாது என்றும், ஆண்களிடம் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளனர். அதன் பின்னர், சோபியா மீது குடும்பத்தினர் தொடர்ந்து சந்தேகம் கொண்டு குடும்பத்திற்கு அவப்பெயர் ஏற்படும் எனக் கருதி அவரைக் கொலை செய்ய திட்டமிட்டு, சோபியாவை அவரது தந்தையும், சகோதரனும் தனியாக கெல்ஜிபுரா என்ற இடத்திற்கு அழைத்துச்சென்றனர். அங்கு ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்திற்குச் சென்றதும், ஹபீல் தனது உடையில் மறைத்து வைத்திருந்த இரும்புச் சுத்தியலை எடுத்து சோபியாவின் தலையின் பின்புறத்தில் தாக்கியுள்ளார். பின்னர் இருவரும் சோபியாவை தூக்கிச் சென்று சாலையில் போட்டுவிட்டு, சம்பவத்தை சாலை விபத்து போல் சித்தரித்துள்ளனர். சோபியா, தனது சகோதரர் ஹபீலுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது மர்ம வாகனம் ஒன்று பின்னால் வந்து மோதிவிட்டு நிற்காமல் சென்றதாக இருவரும் காவல் நிலையத்தில் தெரிவித்தனர். அதன் பின்னர் தலை மற்றும் கால்களில் பலத்த காயங்களுடன் கிடந்த சோபியாவை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

