
தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு கோவளம் பகுதியில் 100 குடும்பங்கள் நாட்டுப்படகுகள் மூலம் சிறிய அளவிலான மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தப்படும் என வெளியிடப்பட்ட அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, மீனவர்கள் மற்றும் உப்பு உற்பத்தியாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து, நேற்று மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது, குடும்பத்தினருடன் கடலில் இறங்கி கருப்புக்கொடிகளை ஏந்தி, கப்பல் கட்டும் தளத் திட்டத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால் கப்பல் கட்டும் தளத் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக தலையிட வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

