க்ரைம்

திண்டுக்கல் : போலீசாரை தாக்க முயன்ற ரவுடி மீது துப்பாக்கிச்சூடு

திண்டுக்கல் மாவட்டம் சிக்கனன்பட்டியைச் சேர்ந்த ரவுடி ராஜா மீது கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்படி ஜாமீனில் வெளியே வந்த அவர், நீண்ட நாட்களாக  போலீசாரின் கண்காணிப்பில் இருந்து தலைமறைவாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நூத்தலாபுரம் கோவில்பட்டியில்  உள்ள தனது சகோதரி வீட்டில் ராஜா பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு சென்று வீட்டை சுற்றிவளைத்து ராஜாவை கைது செய்ய முயன்றனர். அப்போது போலீசாரை கண்ட ராஜா, தான் மறைத்து  வைத்திருந்த பட்டாக்கத்தியால் சார்பு ஆய்வாளர் அருண் பிரசாத்தின்  கையில் வெட்டிவிட்டு தப்ப முயன்றுள்ளார். இதையடுத்து தற்காப்புக்காகவும், அவரை பிடிக்கும் நோக்கிலும் போலீசார் ராஜாவின் காலில் துப்பாக்கியால் சுட்டனர். அப்போது குண்டு பாய்ந்ததில் கீழே விழுந்த ராஜாவை போலீசார் மடக்கிப் பிடித்தனர். பின்னர் காயமடைந்த ராஜா திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து, கத்தி வெட்டில் காயமடைந்த சார்பு ஆய்வாளர் அருண் பிரசாத்துக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு  வருகிறது. மேலும், துப்பாக்கிச்சூடு நடைபெற்ற இடத்தை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு  மேற்கொண்டார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button