
தூத்துக்குடி மாவட்டம் சுந்தரவேல்புரம் தெருவைச் சேர்ந்த காளிமுத்து, வெற்றிவேல் நகரைச் சேர்ந்த ராஜாமணி இருவருக்கும் கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் காளிமுத்துவை கொலை செய்ய ராஜாமணி திட்டமிட்டு, காளிமுத்துவை ராஜாமணி காரில் சரத் என்பவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு காளிமுத்துவுக்கு மது வாங்கிக் கொடுத்து, ராஜாமணி, சரத், சரவணன், சந்தனகுமார், சக்தி பாலா ஆகியோர் சேர்ந்து அவரை வெட்டிக் கொலை செய்துள்ளனர். பின்னர் காளிமுத்துவின் உடலை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று, கமாக் பள்ளி பின்புறம் உள்ள முட்செடி காட்டுப்பகுதியில் வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். இதையடுத்து, காளிமுத்துவை காணவில்லை என அவரது குடும்பத்தினர் தேடியபோது உடல் பாதி எரிந்த நிலையில் அப்பகுதியில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர். பின்னர், விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்ட சக்தி பாலா உயிரிழந்ததால், மற்ற 4 பேர் மீதான விசாரணை தொடர்ந்தது. இதை தொடர்ந்து, வழக்கை விசாரித்த நீதிபதி தாண்டவன், ராஜாமணி, சரத், சரவணன் மற்றும் சந்தனகுமார் ஆகிய 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், ராஜாமணி மற்றும் சரத்பாபுகுமார் ஆகியோருக்கு தலா ரூ.20 ஆயிரம் அபராதமும், சரவணன் மற்றும் சந்தனகுமார் ஆகியோருக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
