
உத்தராகண்ட் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஹரிஷ் ராவத், தனது உதவியாளர் வீட்டில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் பதவிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஹரிஷ் ராவத் 2014 முதல் 2017ஆம் ஆண்டு வரை உத்தராகண்ட் முதல்வராக பதவி வகித்தபோது, அவரது சிறப்புப்பணி அதிகாரியாக சந்தன் சிங் ஜீனா செயல்பட்டார். அப்போது கிராம பஞ்சாயத்து விகாஸ் அதிகாரி தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், சந்தன் சிங் ஜீனாவின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அந்த சோதனையின்போது கணக்கில் வராத பணம், தங்கம் மற்றும் ஆடம்பர கைக்கடிகாரங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டது. இதையடுத்து, தன் மீதான அல்லது தனது உதவியாளர் மீதான விவகாரத்தால் காங்கிரஸ் கட்சியின் பெயருக்கு களங்கம் ஏற்படக் கூடாது என்றும், ராகுல் காந்தியின் ஊழலுக்கு எதிரான போராட்டம் எந்த வகையிலும் பலவீனமடையக் கூடாது என்றும் கருதி பதவி விலகும் முடிவை எடுத்ததாக ஹரிஷ் ராவத் தெரிவித்துள்ளார்.
மேலும், தேர்தல் எப்போது நடைபெறும் என்று யாராவது கேட்டால், சிபிஐ என் கதவைத் தட்டும் போதுதான் தேர்தல் நடைபெறும் என்று தான் வேடிக்கையாகக் கூறுவேன் என தெரிவித்த அவர், இந்த முறை தனது கதவைத் தட்டுவதற்குப் பதிலாக தனது கூட்டாளிகளில் ஒருவரின் கதவைத் தட்டி ஒரு கதையை உருவாக்க முயற்சி செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

