
தஞ்சாவூர் மாவட்டம் வீரபுடையான்பட்டி கிராமத்தில் 900 பேர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் பல ஆண்டுகளாக குடிநீர் பிரச்னை நீடித்து வருவதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், குடிநீருக்காக ஆண்கள் பைக்குகளில் குடங்களை எடுத்துச் செல்வதுடன், பெண்கள் சிலர் ஒன்றிணைந்து லோடு ஆட்டோவை வாடகைக்கு எடுத்து, கிராமத்தில் இருந்து சுமார் 3 கி.மீ., தொலைவில் உள்ள செல்லப்பன்பட்டி, ஆவாரம்பட்டி மற்றும் பூதலூர் பகுதிகளுக்கு சென்று தண்ணீர் பிடித்து வருகின்றனர்.
இது குறித்து தங்கள் கிராமத்திலிருந்து காவிரி மற்றும் வெண்ணாறு உள்ளிட்ட ஆறுகள் சுமார் 10 கி.மீ., தொலைவில் இருந்தாலும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் விநியோகிக்கப்படும் குடிநீர் உப்பு தன்மை கொண்டதாக இருப்பதால், அதை பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாகவும் கூறினர்.
தங்களை சுற்றியுள்ள பல கிராமங்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில், வீரபுடையான்பட்டி கிராமத்திற்கு இதுவரை அந்தத் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டினர். இதனை தொடர்ந்து, கூட்டு குடிநீர் திட்டத்தின் குழாய்கள் கிராமம் வழியாக சென்றும், குடிநீர் கிடைக்கவில்லை என மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ஒரு குழாய் மூலம் குடிநீர் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள அவர்கள், நடவடிக்கை எடுக்காவிட்டால் ரேஷன், ஆதார் மற்றும் வாக்காளர் அட்டைகளை கலெக்டரிடம் ஒப்படைக்க உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

