தென்காசி மாவட்டம், குத்துக்கல்வலசை திருமலை கோயில் சாலையில் அமைந்துள்ள ராச்சனா பேரடைஸ் குடியிருப்பு பகுதியில் இருந்து தினந்தோறும் கழிவுநீர் வெளியேறி, சாலையில் ஆறாக ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், கழிவுநீர் தொடர்ந்து சாலையில் தேங்கி ஓடுவதால் துர்நாற்றம் வீசுவதுடன், அப்பகுதியில் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், தேங்கும் கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி, நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இதை தொடர்ந்து, பல நாட்களாக நீடித்து வரும் இப்பிரச்சினைக்கு குத்துக்கல்வலசை ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, கழிவுநீர் சாலையில் செல்வதை தடுத்து, நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பின்னர், மக்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.



