செய்திகள்

அரியலூர் : நடைபாதையில் தேங்கிய தண்ணீர் பிரச்சனையில் இளைஞர் வெட்டிக்கொலை – நான்கு பேர் கைது

அரியலூர் மாவட்டம் புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்களான நாகராஜன், கண்ணன் அருகருகே வீடு கட்டி வசித்து வந்தனர். இவர்களது வீடுகளுக்குச் செல்லும் நடைபாதையில் கடந்த சில நாட்களாக தண்ணீர் தேங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே ஏற்கனவே பிரச்சனை இருந்து வந்ததது. இந்நிலையில், நேற்று இரவு நடைபாதையில் தண்ணீர் தேங்குவது தொடர்பாக மீண்டும் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் வாக்குவாதம் முற்றிய நிலையில், கண்ணனின் மகன் ராஜா மற்றும் நாகராஜனின் மகன் சுப்பிரமணியன் ஆகியோர் மோதிக்கொண்டனர். அப்போது சுப்பிரமணியன் ராஜாவை அரிவாளால் வெட்டியதில் படுகாயமடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராஜாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த ராஜாவின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் அரியலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இரவு நேரத்தில் வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட பின்னர் ராஜா கொலை செய்யப்பட்டதாகவும், கொலைக்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட்டிருந்தாலும், கொலைக்கு தூண்டுதலாக இருந்ததாகக் கூறப்படும் நபரையும் கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்றும் உறவினர்கள் தெரிவித்தனர். இதனால் ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த கொலை தொடர்பாக சுப்பிரமணியன், கண்ணன் உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button