
விளம்பரத்திற்காக விவசாயிகளை வஞ்சிக்காமல், விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் மற்றும் முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடியை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்கு தேவையான தண்ணீர் கிடைப்பது குறித்து விவசாயிகள் கவலை தெரிவித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, குறுவை சாகுபடிக்கு உரிய நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், சம்பா சாகுபடிக்காக செப்டம்பர் இறுதியில் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிய நிலையில், செப்டம்பர் 1-ம் தேதியே அணை திறக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்துள்ளதால், அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து சரிந்து வருவதாகவும், இதனால் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்வதிலும், பயிரின் முக்கிய வளர்ச்சிக் கட்டங்களில் நீர் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்படும் என விவசாயிகள் கவலை தெரிவிப்பதாகவும் உதயநிதி கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து, குறுவை சிறப்பு தொகுப்புக்கும் வறட்சி நிவாரணத்துக்கும் உள்ள வேறுபாட்டை அரசு புரிந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்திய அவர், திருச்சியில் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி போராடிய விவசாயிகளை அமைச்சர்கள் சந்தித்த விதத்தையும் விமர்சித்துள்ளார்.
மேலும், விவசாயிகளின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு உரிய வறட்சி நிவாரணத்தையும் முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடியையும் தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என எதிகட்சி தலைவர் உதயநிதி வலியுறுத்தியுள்ளார்.