
தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு வரும் அக்டோபர் 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, வாக்குச்சாவடிக்கு நேரில் வந்து வாக்களிக்க முடியாத 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளில் இருந்தபடியே தபால் வாக்கு செலுத்தும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து, தேர்தல் பணியாளர்கள் அடங்கிய குழுக்கள் சம்பந்தப்பட்ட வாக்காளர்களின் வீடுகளுக்கே சென்று, தபால் வாக்குகளைப் பெறும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக மொத்தம் 30 குழுக்கள் அமைக்கப்பட்டு,
காலை 7 மணி முதல் மதியம் 3 மணி வரை தபால் வாக்குகளைப் பெறும் பணி நடைபெறுகிறது. தாராபுரம் தொகுதியில் 85 வயதுக்கு மேற்பட்ட 992 முதியவர்களும், 244 மாற்றுத்திறனாளிகளும் தபால் வாக்கு செலுத்த தகுதி பெற்றுள்ளனர்.
இதன்படி, மொத்தம் 1,236 வாக்காளர்களிடம் வீடுகளுக்கே சென்று தபால் வாக்குகளைப் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்துள்ளார்.
மேலும், தபால் வாக்குப்பதிவு நடைபெறும் பணிகளை தேர்தல் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து, தேர்தலை முன்னிட்டு தொகுதியில் வாக்குப்பதிவு தொடர்பான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

