செய்திகள்

மாணவியர் விடுதியில் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் திடீர் ஆய்வு

மதுரை மாவட்டம் மேலூரில் அரசு கலைக்கல்லூரி அருகே செயல்பட்டு வரும் சமூகநீதி கல்லூரி மாணவியர் விடுதியில், உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அந்த ஆய்வின்போது, மாணவிகளுக்காக தயார் செய்யப்பட்டிருந்த உணவு மற்றும் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் தரத்தை அமைச்சர் பார்வையிட்டார்.

மேலும், விடுதியின் சமையல் கூடம், சமையல் பணிகள் மற்றும் இரவு உணவின் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

இதை தொடர்ந்து, விடுதியில் தங்கியுள்ள மாணவிகளிடம் நேரடியாக கலந்துரையாடிய அமைச்சர், விடுதியில் போதுமான வசதிகள் உள்ளதா, ஏதேனும் குறைகள் உள்ளதா என்பது குறித்து கேட்டறிந்தார்.

அப்போது, விடுதியில் நிலவும் குறைகள் குறித்து தெரிவித்தால், கல்லூரி நிர்வாகம் மூலம் மிரட்டப்படுவதாகவும், சில நேரங்களில் பெற்றோரை அழைத்து வருமாறு கட்டாயப்படுத்தப்படுவதாகவும் மாணவி ஒருவர் அமைச்சரிடம் புகார் தெரிவித்தார்.

இதையடுத்து, மாணவியின் புகாரை கேட்டறிந்த அமைச்சர், விடுதியில் மாணவிகளின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும், இரவு நேரத்தில் பெண் காவலாளி நியமிப்பது, மாணவிகளுக்கு தரமான உணவு வழங்குவது உள்ளிட்ட தேவையான வசதிகள் செய்து தரப்படும் என உறுதியளித்தார்.

இதனிடையே, அமைச்சர் விடுதிக்கு வந்தபோது அவரை வரவேற்ற மாணவிகள், முதலமைச்சர் விஜய் எப்படி இருக்கிறார் என நலம் விசாரித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் கலகலப்பான சூழல் நிலவியது.

இதற்கு பதிலளித்த அமைச்சர் விஸ்வநாதன், முதலமைச்சர் நலமுடன் இருப்பதாகவும், மாணவிகள் தெரிவித்த வாழ்த்துகளை அவரிடம் தெரிவிப்பதாகவும் கூறினார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button