
கோவை மாவட்டம் வடவள்ளி அருகே ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து வரும் கமலாத்தாள் என்ற மூதாட்டிக்கு, கடந்த ஆறு ஆண்டுகளாக இலவசமாக சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படாததால், இட்லி தயாரிப்பதில் சிரமம் ஏற்பட்டதாக மூதாட்டி தெரிவித்துள்ளார்.
இதனால், பொதுமக்களுக்கு தொடர்ந்து குறைந்த விலையில் இட்லி வழங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டதாக கூறி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தார்.
மூதாட்டியின் கோரிக்கையை பரிசீலித்த மாவட்ட நிர்வாகம், அவரது மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.
இதை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் அறிவுறுத்தலின்படி, கமலாத்தாள் பாட்டிக்கு மீண்டும் இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், இன்று முதல் கமலாத்தாள் மூதாட்டிக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் தடையின்றி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
