
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனக்கோட்டம் மன்னவனுர் வனச்சரக எல்லைக்கு உட்பட்ட முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றான பேரிஜம் பகுதி முழுவதும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக இருந்து வருகிறது

இந்த பகுதியில் இருந்த பல அரியவகை விலை உயர்ந்த மரங்கள் கடந்த பல ஆண்டுகளாக வனத்துறையினரின் ஒத்துழைப்புடன் மரக்கடத்தல் கும்பல்கள் சிறுக சிறுக வெட்டி கடத்தி வந்துள்ளனர். அந்நிய மரங்களை அகற்றும் திட்டத்தில் முறைகேடுகள் நடந்தது தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வனத்துறையின் உயரதிகாரிகளுக்கு புகார் சென்றுள்ளது.

சமீப காலத்தில் மட்டும் ஆயிரக்கணக்கான சவுக்கு (Casuarina) மற்றும் பிற அரியவகை மரங்கள் (சோலை மரங்கள்) மரங்கள் வெட்டி கடத்தப்பட்டுள்ளதாகவும் இதனால் அப்பகுதியின் இயற்கை சமன்பாடு மாறிவருவது மட்டுமின்றி பல நூறு கூடி மதிப்பிலான மரங்களை வெட்டி கடத்தியதன் மூலம் கருப்பு பணமாக மரக்கடத்தல் மற்றும் உறுதுணையாக இருந்த வனத்துறையினருக்கும் சென்றுள்ளது.

முதலில் சாதாரண புகாராக கருதி மாவட்ட வனத்துறை விசாரணை நடத்தி அறிக்கையை அனுப்ப அதனை கண்ட மாநில அதிகாரிகள் குற்றத்தின் தன்மை மற்றும் மதிப்பை கண்டு உடனடியாக வன குற்றத்தடுப்பு பிரிவு உட்பட தமிழ்நாடு வனத்துறையின் பல்வேறு சிறப்பு தனிப்பிரிவுக்கும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டனர்

சிறப்பு தனிப்பிரிவு அளித்த அறிக்கையின் அடிப்படையில் மாநில வன குற்ற தடுப்பு பிரிவின் இயக்குனர் ராகுல் IFS கள ஆய்வு மேற்கொண்டு நேரடி விசாரணை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டதனை தொடர்ந்து சில நாட்கள் கொடைக்கானல் பகுதியிலேயே தங்கி மரக்கடத்தல் நடைபெற்ற இடங்களில் கள ஆய்வு மேற்கொண்டு வனத்துறையினரிடம் மற்றும் ரகசியமாக அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டார்.

விசாரணையின் முடிவில் பட்டா நிலங்களில் மரங்களை வெட்ட அனுமதி பெற்று வனத்துறை அதிகாரிகளின் உடந்தையுடன் ரிசர்வ் காடுகளுக்குள் புகுந்து மரங்கள் வெட்டப்பட்டதாக தெரிந்த நிலையில் முறைகேடு தொடர்பாக, வனச்சரகர் (Ranger), வனவர்கள் (Foresters), வனகாவலர் (Forest Guard) உட்பட நான்கு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன் இந்த மரக்கடத்தலில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் உள்ள கொடைக்கனல் வனத்துறையில் பணிபுரியும் பலருக்கும் விளக்கம் கேட்டு குறிப்பாணை வழங்கப்பட்டது
இதில் முறையான கண்காணிப்பு மற்றும் நடவடிக்கை எடுக்க தவறிய கொடைக்கானல் வனக்கோட்ட அலுவலர் யோகேஷ் குமார் மீனா IFS பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மேலும் கொடைக்கானல் வனக்கோட்டத்தில் பல வனத்துறையினர் அதே வனக்கோட்டத்திற்குள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
சட்டவிரோதமாக மரம் வெட்டி கடத்தியதாக கொடைக்கானலைச் சேர்ந்த தொடர்ந்து மரம் வியாபாரம் செய்து வரும் காசிம், முகமது சலீம் ,அப்துல் காதர், ஜெயலானி உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வனப்பகுதியில் அனுமதி இல்லாமல் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மரங்களை வெட்டி கடத்திய நான்கு நபர்களையும் தேடி வருவதாக வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்
இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக இப்பகுதி மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளிலும் இது போன்றுகாப்பு காடுகளில் இருந்து அந்நிய மரங்கள் என கூறி விலை உயந்த மரங்கள் பலவும் தொடர்ந்து கடத்தப்பட்டு வந்துள்ளதாகவும் அவற்றையும் சேர்த்தால் சுமார் பத்தாயிரம் மரங்களுக்கு மேல் வரும் என்றும் இதே பகுதியில் அனைத்து வன சிறப்பு பிரிவினரும் 100% தணிக்கை மேற்கொண்டால் தமிழக வனத்துறையில் பணியாற்றி வரும் மற்றும் ஓய்வு பெற்ற நூற்றுக்கும் மேற்பட்ட வனத்துறையினர், மட்டுமின்றி பல பெரும் மர மில் அதிபர்கள் மற்றும் அவர்களது இடைதரகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலை வரும் என்றும் மிகப்பெரிய மரக்கடத்தல் மோசடி வெளிச்சத்திற்கு வரும் எனவும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்