சட்டமன்ற தேர்தல் தோல்வியால் ஏற்பட்ட விரக்தியால் ஏற்கனவே செய்வதறியாது திகைத்து வருகின்றது திமுக. ஊழலுக்கு எதிராக ஆளும் தவெக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளால் மக்கள் மத்தியில் பெருகி வரும் ஆதரவினை கண்டு, தங்கள் எதிர்காலம் குறித்த கடுமையான கவலைகளில் திமுகவும், அதிமுகவும் உள்ளது.
தனி நபர் தாக்குதல்
அரசியல் என்பது தனிநபர் தாக்குதல்தான் என்ற மனோ நிலையில், திமுக – அதிமுக கரம்கோர்த்து முதலமைச்சர் விஜய் மீதான தாக்குதல்களை ஆ.ராசா, அனிதா ராதாகிருஷ்ணன், ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
தவெக நிர்வாகிகள் மீதான குற்றச்சாட்டுகளோ, அரசு மீதான புகார்களோ வரும்பட்சத்தில் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறார் முதலமைச்சர் விஜய். இதனால், ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைக்க முடியாமலும், மக்களுக்கான அரசியலை முன்னெடுத்துச் செல்ல முடியாமலும் தடுமாற்றத்தில் உள்ளது திமுக – அதிமுக. மேடை கிடைத்துவிட்டது ஆளும் அரசை விமர்சிக்க ஏதுமில்லையே என, எதையாவது கூறி தங்களின் இருப்பை காட்டி வருகின்றனர் அக்கட்சிகளின் நிர்வாகிகள்.
உடையும் ரகசியங்கள்
தேர்தல் முடிவு வெளியான அன்றே தவெக தலைவர் விஜய் முதலமைச்சராவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்று அவர் தலைமையிலான அரசை அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டது திமுகவின் ஒரு பிரிவு. தற்போதைய சூழலுக்கு அது நிகழ வாய்ப்பில்லை என்பதை உணர்ந்து, அதனை கனிமொழி கருணாநிதி எதிர்த்ததனால் அது நிகழாமல் போனது. அதனால் நிர்வாக ரீதியாக திமுகவிற்குள் புகைச்சல் பெருகி வருகிறது.
இருந்தாலும், ஆளும் அரசை சிறிது காலம் விமர்சிக்க மாட்டோம் என கூறிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோரால், அரசின் ஊழலுக்கு எதிரான செயல்பாடுகளைக் கண்டு அமைதியாக இருக்க முடியவில்லை. விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என தனது பங்காளியான அதிமுகவுடன் இணைந்து விமர்சித்து வருகின்றனர்.
ரகசியமாக மேற்கொள்ளப்பட்ட திமுக – அதிமுக கூட்டணி முயற்சி, ஆதாரப்பூர்வமாக திமுகவுடன் இருந்த கட்சித் தலைமைகளால் வெளிப்படுத்தப்பட்டது. “திருச்சி சிவா மத்திய அமைச்சராவார்” என அனிதா ராதாகிருஷ்ணன் கூறியதன் காரணமாக பாஜகவுடனான கூட்டணி முயற்சிகளின் இரகசியமும் வெளிப்படுத்தப்பட்டது. அதுபோன்று அடுத்தக்கட்ட ரகசிய திட்டமும் வெளியாகியுள்ளதோ? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
சட்டமன்றமும் கலவரங்களும்
1989 மார்ச் மாதத்தில் சட்டமன்றத்தில் நடைபெற்ற மோசமான நிகழ்வுகளால், அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா, தான் திமுகவினரால் அவமானப்படுத்தப்பட்டதாக எழுப்பிய குற்றச்சாட்டுகள் எவராலும் மறக்க முடியாது.
அதே போன்று 2017 பிப்ரவரி மாதம் சட்டமன்றத்தில் அமளி ஏற்பட்டபோது, தனது சட்டை கிழிக்கப்பட்டதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார். சட்டமன்றப் பேரவைக்குள் கிழியாத மு.க.ஸ்டாலினின் சட்டை, அவரது எதிர்க்கட்சித் தலைவர் அறைக்குள் சென்று, வெளியே வந்தபிறகே கிழிந்த நிலையில் காணப்பட்டது திட்டமிடப்பட்ட நாடகம் என அப்போது வெளியான காணொலிகளும், விமர்சனங்களையும் யாரும் புறந்தள்ள முடியாது.
திமுக: 2026 ஆகஸ்டில் என்ன திட்டம்?
தமிழ்நாடு தலைகுனியாது என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்த திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், “மானங்கெட்ட தமிழ்நாடு” என தமிழ்நாட்டை இழிவாகக் கூறியதோடு அல்லாமல் “உன்னை சட்டமன்றத்திற்குள் வைச்சு பார்த்துக்கொள்கிறோம்டா, உனக்கு எலும்பு இருக்காது உடைச்சுட்டுதான் அனுப்பி விடுவோம்“ என ஆகஸ்ட் மாதம் சட்டமன்றம் கூடும்போது சட்டமன்றத்திற்குள் என்ன செய்யப்போகிறோம் என்ற ரகசியத்தை வெளிப்படுத்தியுள்ளாரோ என சிந்திக்க வேண்டியுள்ளது.
தாத்தா காலத்து திமுக என பெருமை பேசி வரும் திமுக, தங்களது தாத்தா கலைஞர் கருணாநிதி அவர்கள் காலத்தில் ஜெயலலிதா அவர்களுக்கு ஏற்படுத்தியதைப் போன்றும், அவர்களது “அப்பா” மு.க.ஸ்டாலின் அவர்களது காலத்தில் சட்டையை தாங்களே கிழித்துக்கொண்டது போலவும், தற்போது உதயநிதி அவர்கள் காலத்தில் “மார்க்கண்டேயன் கூறியதைப் போன்று திட்டமிடுகிறதோ…?” என்ற சந்தேகத்தை உறுதிப்படுத்துகின்றது.
ஏனென்றால், “ஜனநாயகப் பண்புகள் அறவே இன்றிச் செயல்படும் த.வெ.க. ஆட்சி” என கூறியுள்ளதன் மூலம் மார்க்கண்டேயன் பேசியது ஜனநாயகப் பண்பு என சுட்டிக்காட்டியுள்ளாரோ மு.க.ஸ்டாலின்.


