
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை உட்பட 9 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையில் 2024ஆம் ஆண்டு அந்தமான் கடற்பகுதியில் மியான்மர் நாட்டினர் படகில் இருந்து 36 ஆயிரம் கோடி மதிப்பிலான 6,016.87 கிலோ மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், படகில் இருந்த 6 மியான்மர் நாட்டினரும் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தமிழகத்தைச் சேர்ந்த நபர்களின் தொடர்பு, பணப் பரிமாற்றங்கள், சர்வதேச போதைப்பொருள் கடத்தல், வலையமைப்புடன் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து NIA அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து, கைது செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகப்படும் நபர்களின் வீடுகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய இடங்களில் தற்போது சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மியான்மர் மற்றும் பர்மா பகுதிகளை மையமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுடன் தமிழகத்தைச் சேர்ந்த சிலருக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து NIA அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து , சென்னை நந்தனம் சிஐடி நகரில் வசித்து வரும் இக்பால், தோல் பொருட்களை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருவதால் அவரது வீட்டில் NIA அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து, சென்னை வண்ணாரப்பேட்டை ஜமால் ரெசிடன்சி குடியிருப்பு பகுதியில் உள்ள அபூபக்கர் கனிசித்திக் வீட்டிலும் அதே குடியிருப்பு பகுதியை சேர்ந்த சையது என்பவர் வீட்டிலும் NIA அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சோதனை முடிந்த பின்னரே கைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் விசாரணையின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



