
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல்–விருதுநகர் சாலையில் உள்ள அன்புச்செழியனுக்கு சொந்தமான பட்டாசு கடை நேற்று இரவு வியாபாரம் முடிந்து கடை பூட்டப்பட்டிருந்தது. இதனை அடுத்து, பட்டாசு கடையில் இன்று காலை திடீரென தீப்பிடித்தது. இதில் தீ வேகமாக பரவிய நிலையில், கடையில் இருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறின. தொடர்ந்து, கடையில் இருந்த சுமார் ரூ.20 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து சேதமடைந்தன. இதனை அடுத்து, கடையில் இருந்து கரும்புகை வெளியேறியதை கண்ட பொதுமக்கள், தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

